
ஏப்ரல் 30 அன்று எனது முதல் சம்பளம் ரூ. 3000-த்திற்கான செக் வந்தது.
அதற்கு 2 நாள் முன்னதாகவே பார்ப்பவர்களிடமெல்லாம்.... போன் செய்பவர்களிடமெல்லாம்.... எனக்கு சம்பளம் வரப் போகிறது என்று பினாத்த ஆரம்பித்து விட்டேன்.
செக் பார்த்தவுடன் கண்களில் அருவி வழியத் தொடங்கி விட்டது.
அட...!
நான் கூட வேலை செய்கிறேன்....!
நான் கூட சம்பளம் வாங்கி விட்டேன்....!
இந்த நினைப்பே...
கோடி யானைகளின் பலத்தைத் தந்தது.
சென்ற வருடம் இதே நாளில் அப்பாவிடம்....
"அப்பா... நான் அடுத்த மாசத்துலருந்து சம்பளம் வாங்க ஆரம்பிசிடுவம்ப்பா. அதுக்கப்புறம் உங்களுக்கு மாசா மாசம் 1000 ரூவா கண்டிப்பா தருவேன்...!"
என்று உறுதியளித்தது நினைவுக்கு வந்தது.
2007 ஜூன் 27 அன்று அப்பா எங்களை விட்டுப் போகும் நாள் வரையிலும், எல்லாரிடமும்...
"அடுத்த மாசத்திலருந்து என் சின்ன மவன் சம்பளம் வாங்குவான்... எனக்கு மாசத்துக்கு ஆயிர ரூவா குடுக்கறன்னு சொல்லியிருக்கறான்" என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.
இதை எழுதும் இந்த வினாடியிலும் கண்ணீர் மறைக்கிறது.
அவருடைய அடுத்த மாத நம்பிக்கை.... ஒரு வருடம் கழித்துத்தான் நிறைவேறியிருக்கிறது.
இந்த நிமிடம் வரையிலும் நான் உண்ணும் ஒவ்வொரு பருக்கையும் என் தந்தையின் உழைப்பு.
அண்ணனுக்கப்புறம் 6 பெண்களுக்குப் பிறகு... 8-வதாய் என்னைத் தவமிருந்து பெற்று சீராட்டி வளர்த்தவர்.
என் இசைத்திறன், அறிவுத்திறன்.... அனைத்துமே அவரது மரபணு தந்த வரம்.
(வீரமாமுனிவரின் 'தேம்பாவணியை' அவர் சுயமாக மெட்டுக்கட்டி வைத்திருந்தார்.)
அவரது கம்பீரக் குரலில் எந்தப் பாடலுமே கேட்கக் கேட்க இனிமை.
அவர் தன் மக்களுக்கு எழுதும் ஒவ்வொரு கடிதமும் ஒரு இலக்கியம் போன்றது.
அவரிடமிருந்து நான் பெற்றவை எண்ணிலடங்கா....
நான் பெற்றதில் கொஞ்சமேனும் திருப்பித் தர ஆயிரம் கனவு கண்டிருந்தேன்.
என் மனக் காடெங்கும்...
முட்டி...
மோதி...
அலைந்துத்...
திரிந்துக்....
கதறுகிறேன்.
அப்பா....! உங்க சின்ன மவன் சம்பளம் வாங்கியுட்டம்ப்பா.
உங்களுக்குச் சேர வேண்டிய 1000 ரூவாய யார்ட்டப்பா குடுப்பன்.?
ஏம்பா என்ன விட்டுட்டுப் போனீங்க?
கண்ணீரினூடே நேரெதிர் ஷெல்ஃபில் புகைப்படத்திற்குள்ளிருந்து அப்பாவின் உருவம் ஏதோ பதில் சொல்வதாய்ப் படுகிறது.

1 comment:
வாழ்த்துக்கள் தல...
Post a Comment