
ஆம்! இது வரையில் அது ஒரு பெருங்கானவாகவே இருந்தது.
இளம் பிராயத்தில் அப்பா சொன்ன பார்த்திபன் கனவு கதை கேட்டு.... பிந்நாளில் அதுவும் அதோடு "சிவகாமியின் சபதமும்" திரும்ப திரும்ப படித்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன.
18 வயதில் எழுத்தாளக் கனவு எட்டிப் பார்த்த சமயம்.., முதல் முயற்சியான "அந்திமடல்" சிறுகதை தினமலரில் வெளிவந்தபோது அப்பாவிடம் சன்மானத் தொகையான 100 ரூபாயை பெருமை பொங்க கொடுத்த சம்பவம் நினைவுக்கு வருகிறது.
எழுத்தாள அஸ்திவாரத்திற்காக "புதுமைப் பித்தன், கு. ப. ரா, தி. ஜானகிராமன், பிரபஞ்சன், ஜெயகாந்தன்" இன்னும் பல இலக்கிய மேதைகளின் படைப்புக்களை வெறி கொண்டு தேடித் தேடிப்.... படித்த காலங்களில் கல்கி எனும் மாமனிதரும்,
அதே பெயருடைய பத்திரிக்கையும் பிரும்மாண்டமாய் மனதுக்குள் எழுவார்கள்.
"கல்கி"பத்திரிகையில் என் எழுத்தா? ஹும்..! அதெல்லாம் அடுத்த பிறவியில்தான் என்ற நினைப்பில் விளையாட்டாய்க் கூட ஒரு படைப்பையும் அனுப்பியதில்லை.
யாருக்கு எப்படியோ...? என்னைப் பொறுத்த வரை "கல்கியில் என் படைப்பு என்பது ஒரு உன்னதக் கனவு."
அது நிறைவேறிய சந்தோஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
இவ்வார தன்னம்பிக்கைச் சிறப்பிதழில் "காயங்களுக்கு நன்றி" என்று என் கட்டுரை.
இப்பவும் அப்பா எதிரில், ஷெல்ஃபில் புகைப்படத்துள் புன்னகைக்கிறார்.
"அப்பா..! கல்கியில உங்க பிள்ளை எழுதினது வந்திருக்குப்பா......"
சொல்லில் அடங்காததொரு சோழச் சோகம் கப்புகிறது.
பயணம் தொடர்கிறது.